நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் பற்றிய முழு தகவல்

 நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் பற்றிய முழு தகவல்


மனிதர்களாக பிறந்த அனைவருமே ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காகவே சமுதாயம் என்ற அமைப்பு உருவாகியது. ஆனால் பலரும் தங்களின் சுயநலத்திற்காக பிறரை ஏமாற்றுகின்றனர். இப்படி ஏமாந்தவர்கள் தங்களுக்கான நியாயத்தை வழங்குமாறு வேண்டும் ஒரு தலம் தான் “ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி கோவில்”.இக்கோவிலை பற்றியும் இக்கோவிலின் மேலும் பல சிறப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.


நாவலடி கருப்பசுவாமி கோவில் தல வரலாறு 

1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் இது என இங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். இங்கிருக்கும் இறைவனின் பெயர் “கருப்பசுவாமி” அன்னையின் பெயர் “செல்லாண்டியம்மன்”. முற்காலத்தில் இக்கோவில் இருந்த வழியாக வணிகர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். அப்படி ஒருமுறை ஒரு வணிகர்கள் குழு இப்பகுதி வழியாக பயணித்த போது இருள் சூழ்ந்து விட்டதால் இங்குள்ள நாவல் மரத்தின் அடியில் தங்களுடன் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை வைத்துவிட்டு தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்த வணிகர்கள் அக்கல்லை எடுக்க முயன்ற போது அதை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. பல வாறு முயன்றும் அக்கல்லை நகர்த்த முடியாத போது அங்கிருந்த ஒரு பக்தரின் உடலில் இறங்கிய கருப்பசுவாமி, தான் இந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அந்த கல் இருக்கும் பகுதியை சுற்றி ஒரு கோவிலை எழுப்புமாறு கூறியதாகவும், அதன்படியே அவரது பக்தர்கள் கோவிலை கட்டியதாகவும் தல புராணம் கூறுகிறது. நாவல் மரத்திற்கடியில் கோவில் கொண்டதால் “நாவலடியான்” என்ற பெயரும் இந்த இறைவனுக்கு உண்டு.


கோவிலின் சிறப்பு 

பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க இக்கோவில்பகுதியில் இருக்கம் “மூன்று வேல்களில் மூன்று எலுமிச்சை பழத்தை: சொருகி வழிபடுகின்றனர். தெரிந்தே பல தவறுகளையும், பாவங்களையும் செய்தவர்கள், கருப்பசுவாமி தங்களை மன்னித்தருள இதே வேண்டுதல் முறையை கடைபிடிக்கின்றனர். இந்த வேல்களுக்கு அருகில் இருக்கும் கருப்பசுவாமியின் குதிரை சிலை இவை எல்லாவற்றையும் பார்க்கும் இறைவனின் சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் தங்களின் காணிக்கையாக இக்கோவிலுக்கு சற்று தள்ளி இருக்கும் பகுதியில் ஆடு கோழி போன்றவற்றை பலியிட்டு, அவற்றை சமைத்து கருப்பசுவாமிக்கு படையல் வைக்கின்றனர். இக்கோவிலில் உள்ள அரச மரத்திற்கு சிலர் செருப்பையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். மற்றும் தங்கள் வேண்டுதல்களை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி இங்கிருக்கும் நாவல் மரத்தில் கட்டிவைக்கின்றனர்.


கோவில் அமைவிடம்

ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி கோவில் நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இவ்வூருக்கு பல போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன. 

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை. 

கோவிலின் முகவரி 

செயல் அலுவலர் ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி கோவில், மோகனூர, நாமக்கல் மாவட்டம் – 637015 

தொலைபேசி எண்கள்: 4286 256400, 4286 256401, 4286 255390


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments