எட்டுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் சிறப்புக்கள்
அனைத்து உயிர்களின் மீதும் கருணை கொண்ட கருணாமூர்த்தி சிவபெருமான் ஆவார். தன்னை உண்மையாக வழிபடும் பக்தர்களின் எத்தகைய துயரங்களையும் நீக்குபவர். அந்த சிவனிலேயே தன்னை கரைத்து கொண்டவர்களுக்காக எத்தகைய காரியங்களையும் செய்யக்கூடியவர் சிவன். அந்த வகையில் தனது பக்தர் ஒருவருக்கு தன் கைகளாலேயே சிவலிங்கம் வழங்கி, அவரின் கோரிக்கையை நிறைவேற்றியதோடு மேலும் பல பக்தர்களின் துயர்களை தீர்க்கும் கேரள மாநிலம் “எட்டுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் சிறப்புக்கள்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எட்டுமானூர் மகாதேவர் கோயில் வரலாறு
மிகவும் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த எட்டுமானூர் மகாதேவர் கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். கோயில் புராணங்களின் படி கார பிரகாசர் எனும் முனிவர் தான் செய்த பாவங்களை தீர்க்க சிவனின் வரம் பெற இக்கோயில் இருக்கும் பகுதியில் சிவபெருமானை குறித்து தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் தானே ஒரு சிவலிங்கத்தை கரபிரகாச முனிவருக்கு தந்தார். முனிவரும் அதை பெற்று இக்கோயிலில் ஸ்தாபித்தார். அந்த லிங்கம் தான் மகாதேவர் என்கிற பெயரில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. மேலும் தனது யோக சக்தியால் மான் உருவம் பெற்ற கரபிரகாசர் சிவபெருமானிடம் தன்னை சுமந்து செல்லும் படி வேண்ட, சிவனும் அவரை எடுத்து சென்றதால் இந்த ஊர் எட்டுமானூர் என்றழைக்கப்படுகிறது.
மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவரும் இக்கோயிலின் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஆதிசங்கரர் இக்கோயிலில் தான் தனது புகழ்பெற்ற சௌந்தர்யா லஹரி பாடலை இயற்றியதாக கூறுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டில் சந்திர பாஸ்கரன் என்கிற பாண்டிய மன்னனின் உடலில் இருந்த துஷ்ட சக்திகள் இக்கோயிலில் வழிபட்ட போது நீங்கியதால், அதற்கு தனது நன்றிக்கடனாக தற்போதுள்ள கோயிலை அப்பாண்டிய மன்னன் கட்டி தந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது.
எட்டுமானூர் கோயில் சிறப்புக்கள்
எட்டுமானூர் கோயிலின் விஷேஷ அம்சமாக கருதப்படுவது கடந்த 450 ஆண்டுகளாக கோயிலின் நுழைவாயிலில் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் விளக்கு ஆகும். இதை மலையாள மொழியில் வல்லிய விளக்கு என்று அழைக்கின்றனர். இந்த விளக்கின் கீழ படியும் எண்ணெய் மை கண் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் தீர்க்கும் குணம் கொண்டது என பக்தர்கள் கூறுகின்றனர்.
நம்மை பீடித்த துஷ்ட சக்திகள் நீங்கவும், அல்சர், ஆஸ்துமா, புற்று நோய், வயிறு சம்பந்தமான வியாதிகள், தோல் வியாதிகள் போன்ற எந்த வகையான நோய்களும் நீங்க இக்கோயிலுக்கு சென்று வழிபட்டு, அங்கு தரப்படும் பிரசாதத்தை சாப்பிட்டால் முற்றிலும் நீங்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும். கோயில் அமைவிடம் எட்டுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் கேரளா மாநிலத்தில் இருக்கும் கோட்டயம் மாவட்டத்தில் எட்டுமானூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 வரையும். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
ஸ்ரீ மகாதேவர் ஆலயம் எட்டுமானூர் கோட்டயம் மாவட்டம் – 686631
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments