வரலட்சுமி விரதம் முறையாக எப்படி இருப்பது? அதன் பலன் என்ன
ஆடி மாதத்திலிருந்து தை மாத காலம் வரை இறைவனுக்குரிய பல விழாக்களும், வைபவங்களும் தொடர்ந்து நடைபெறும் ஒரு காலமாக இருக்கிறது. இவ்விழாக்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களை மைய படுத்தியதாகவும் இருக்கிறது. அப்படி லட்சுமி எனும் பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் “வரலட்சுமி நோன்பு” அல்லது “வரலட்சுமி விரத தினம்”. இந்த வரலட்சுமி விரதத்தை முறையாக இருப்பது எப்படி. அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
வரலட்சுமி விரதம் இருக்கும் முறை:
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள நினைபவர்கள் அதற்கு முந்தைய நாளே அதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது. வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டின் தென்கிழக்கு மூலையில் உங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு மண்டபம் அமைத்து அதை மாவிலை தோரணம், பூ மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தின் இருபுறமும் வாழை மரம் கட்ட வேண்டும்.
அதன் பிறகு வெள்ளியில் ஆன வரலட்சுமியின் சிலையை வைத்து அலங்காரம் செய்யவேண்டும். வெள்ளி சிலை இல்லாதவர்கள் வரலட்சுமி படத்தை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு மண்டபத்தின் முன்பு வாழை இலை விரித்து அதில் அரிசி பரப்பி ஒரு கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தில் அரிசி இட்டு மாவிலை சுற்றி அதன் மேல் ஒரு தேங்காய் வைக்க வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இடுவது அவசியம். அதே போல கலசத்திற்கு சந்தனம் பூசி அதன் மீது அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளின் கிடைக்கும் அம்மன் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டலாம். இந்த வேலைகள் அனைத்தையும் வரலட்சுமி விரதம் அன்று செய்வது கடினம். ஆகையால் அதற்கு முன்னாள் இரவே இவை அனைத்தையும் செய்துவிடுவது நல்லது.
வரலட்சுமி நோம்பன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையை ஆரமிக்க வேண்டும். ஐந்து முக விளக்கேற்றி, அம்மனுக்கு உங்களால் முடித்ததை நிவேதனமாக வைத்து மலர் தூவி மந்திரங்கள் ஜபித்து அம்மனை வழிபட வேண்டும். இது போல மீண்டு மாலையில் பூஜை செய்து விரதத்தை முடித்துக்கொள்ளலாம். ஒரு சிலர் அடுத்த நாள் காலை இந்த பூஜையை முடிப்பது வழக்கம். பூஜையில் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் நாம் பிரசாதமாக உண்ணலாம். வரலட்சுமி விரதம் அன்று பூஜை செய்ய இயலாத பெண்கள் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை மனமுருகி செய்வதன் மூலம் அனைத்து ஐஸ்வர்யங்களும் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கும். செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது. அனைத்து பெண்களும் இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments