மெய்யறிவை வழங்கும் ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

 

மெய்யறிவை வழங்கும் ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்




முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். ஆறுபடை வீடுகளின் வரிசையில் ‘பழமுதிர்சோலை’ என்று குறிப்பிடப்படும் இந்த ஆலயத்தில், முருகப்பெருமான் ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். ‘பழம் உதிர்க்கப்பெற்ற சோலை’ என்பதே பேச்சு வழக்கில் ‘பழமுதிர்சோலை’ ஆனதாக சொல்லப்படுகிறது.

தல வரலாறு

முருகப்பெருமானின் சிறப்புகளைப் பாடிய சங்க கால புலவர்களில் ஒருவராக அறியப்படுபவர், அவ்வையார். முருகப்பெருமானின் மீது அவ்வையாருக்கும், அவ்வையாரின் மீதும் அவரது தமிழின் மீதும் முருகப்பெருமானுக்கும் தனிப் பற்றுதல் இருந்ததை அவரது பாடல்கள் பல எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட அவ்வையாருக்கு ஞானத்தை முழுமையாக முருகப்பெருமான் வழங்கிய இடமாக பழமுதிர்சோலை திகழ்கிறது.

ஒரு முறை அவ்வையார் பழமுதிர்சோலை வழியாக சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில், நீண்ட தூரப் பயணம் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த மரத்தில் ஏராளமான நாவல் பழங்கள் காய்ந்து கனிந்து தொங்கிக்கொண்டிருந்தன. அதை உண்டு பசியாறலாம் என்று நினைத்த அவ்வையின் கண்களில், மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் தென்பட்டான்.

அதே நேரம் அந்தச் சிறுவனே அவ்வையாரை நோக்கி, “என்ன பாட்டி.. மிகவும் களைப்பாக இருக்கிறதா? உங்களுடைய களைப்பைப் போக்க நாவல் பழங்களைப் பறித்து தரட்டுமா?” என்று கேட்டான்.

மகிழ்ச்சியடைந்த அவ்வையார், ‘ஆமாம்.. பறித்துக் கொடுப்பா..” என்றார்.

ஆனால் அந்தச் சிறுவன் உடனடியாக நாவல் பழங்களைப் பறித்துக் கொடுத்துவிடவில்லை. மாறாக, “பாட்டி.. உங்களுக்கு சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு புன்னகைத்த அவ்வையார், ‘சிறுவன் ஏதோ அறியாமையில் கேட்கிறான்’ என்று நினைத்தார். இருப்பினும் “சுட்டப்பழத்தையே கொடு” என்று கூறினார்.

உடனே அந்தச் சிறுவன், மரத்தில் இருந்து நாவல் பழங்களை உலுக்கினான். அவை தரையில் விழுந்தன. அதை எடுத்த அவ்வையார், பழத்தின் மீது ஒட்டியிருந்த மண்ணை அகற்றுவதற்காக, வாயால் ஊதினார். அதைப் பார்த்த சிறுவன், “என்ன பாட்டி.. பழம் மிகவும் சூடாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட திகைத்துப் போன அவ்வையார், வந்திருப்பது சாதாரண சிறுவன் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். “நீ யாரப்பா?” என்று கேட்டார்.

மரத்தின் மீதிருந்து கீழே குதித்த அந்தச் சிறுவன், முருகப்பெருமானாக மாறி அவ்வையாருக்கு காட்சி கொடுத்தார். இப்படி அவ்வையாருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த இடம், சோலைமலை முருகப்பெருமானின் ஆலயத்திற்கு கொஞ்சம் முன்பாக அமைந் திருக்கிறது.

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்துமே, நாவல் பழம் போலத்தான். அந்த உயிர்களின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வேண்டும் என்றால் வெறும் கல்வி அறிவுமட்டும் போதாது. அதோடு இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்திய இடமே, பழமுதிர்சோலை ஆகும்.

இந்த ஆலயத்தில் முன்பு, வேல் வைத்து வழிபடும் முறையே இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் உருவ வழிபாடு வந்திருக்கிறது. மூலவராக சுப்பிரமணியரும், வள்ளி-தெய்வானை தேவியரும் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு அருகில் இருக்கும் வேலுக்குதான் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்கு, கல்வியறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருசாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோம வாரம், திருக்கார்த்திகை தீபத் திருநாள், பங்குனி உத்திரம் போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

மதுரை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அழகர்கோவில். இங்கு மலையின் அடிவாரத்தில் கள்ளழகருக்கு ஆலயம் உள்ளது. அதன் மேல் பகுதியில்தான் சோலைமலை முருகன் கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. அதே போல் அழகர்கோவிலின் அடிவாரத்தில் இருந்து சோலைமலை செல்லவும் சிறப்பு பஸ்கள் ஆலயத்திற்கு உள்ளேயே இயக்கப்படுகின்றன. தவிர அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்தும் கோவிலுக்குச் செல்லலாம்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments