பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்

 பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்

இந்த உலகில் இறைவனின் சார்பாக உயிர்களை படைப்பது மும்மூர்த்திகளில் ஒருவராகிய “பிரம்ம தேவன்” என்பது நமது இந்து மத கோட்பாடாகும். அப்படி படைக்கப்பட்ட உயிர்கள் அதன் படைப்பிற்கான நோக்கத்தை அடைந்த பின்பு, அது இயற்கையாக இறப்பதை உறுதி செய்வது காலமாகிய இறைவனின் செயலாகும். ஆனால் அந்த இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் சிலர் தீய எண்ணங்கள் மற்றும் சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு, பணம் மற்றும் வேறு சில அற்ப காரணங்களுக்காக சக மனிதர்களையும், ஏன் தங்களின் உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களையும் கொலை செய்கிற சம்பவங்களை நாம் அன்றாடம் காண்கிறோம். இப்படிப்பட்டவர்கள் அடையும் தோஷத்திற்கு பெயர் தான் “பிரம்மஹத்தி தோஷம்”. மனிதர்களை கொல்பவர்கள் அவர்களை படைத்த அந்த பிரம்ம தேவனையே கொன்றதாக கருதப்படுவதால் இந்த தோஷத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது.


இந்த மகாபாதகத்தை செய்தவர்களின் சந்ததி ஏழு தலைமுறைக்கு மேல் இருக்காது என சாத்திரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட பாவத்தை செய்த சந்ததியினரின் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. வாழ்க்கை பெரும்பாலும் கடனிலேயே கழியும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீராத நோய்கள் ஏற்படும். ஒரு சிலர் காவல் நிலையம், சிறை போன்றவற்றிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய நிலையிருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட கால தாமதமாகும். சரியான தொழில் மற்றும் வேலைவாய்ப்பின்மை, புத்திர பேறில்லாமை, சரியான கல்வி கற்க முடியாத சூழ்நிலை, கணவன் மனைவி பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்து போன்ற கெடுதலான நிகழ்வுகள் அதிகம் ஏற்படும். இத்தகைய பாவத்தை குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் செய்திருந்தாலோ, அல்லது நமது முன்னோர்கள் யாரேனும் இத்தகைய பாவத்தை செய்ததாக நாம் அறிந்தால் கீழ்கண்ட பரிகாரத்தை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றில் வகைக்கு அரை லிட்டர் வாங்கிக் கொண்டு இந்த ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று மாலை 5 மணிக்கு மேலாக அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று, அந்த ஆலயத்தின் கீழ்கண்ட இடங்களில் 5 எண்ணெய்கள் ஒன்றாக கலக்கப்பட்ட எண்ணையை அகல் விளக்கில் ஊற்றி தீபங்கள் ஏற்ற வேண்டும்.

பலிபீடம், கொடிமரம், கொடிமர நந்தி, துவார பாலகர், வாயில் கணபதி, அதிகார நந்தி, சூரிய மற்றும் சந்திர பகவான், சமயக்குறவர்கள், சப்த கன்னிமார்கள், சுர தேவர், தட்சிணாமூர்த்தி, கன்னிமாருக்கு அருகே இருக்கும் கணபதி, சாஸ்தா பீடம் அல்லது அய்யப்பன் சந்நிதி, வள்ளி தெய்வானையடன் இருக்கும் முருகன் சந்நிதி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், காலபைரவர், சிவன் சந்நிதி, மற்ற துணைதெய்வங்கள் சந்நிதி, ஆகிய இடங்களில் தீபங்களை ஏற்றி விட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் பழம், பாக்கு, பூ, பத்தி, சூடம் தேங்காய் போன்றவற்றை அர்ச்சகரிடம் கொடுத்து, இந்த இரு தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்விக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து செய்தால் அக்குடும்பத்தை பற்றியிருக்கும் பிரம்மஹத்தி தோஷத்தை சிவ பெருமான் நீக்கி அருள்வார்.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments