பழமுதிர்சோலை முருகன் கோயில்

 பழமுதிர்சோலை முருகன் கோயில்


பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் சோலைமலை என அழைக்கப்பட்டது

மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வையார் பாட்டிக்கு முருகப்பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.

இத்தலத்தில் முன்னர் முருக வேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது என்பர்.

நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும்.

சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் பெருக்கெடுக்கும் தீர்த்தம் மிகவும் சுவையாக உள்ளது. இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.


இலக்கியக் குறிப்புகள்

அறுபடைவீடுகளிள் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் கோவிலின் நுழைவாயில்

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்சோலையே முருகனின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தல வரலாறு

பழமுதிர் சோலை அருகே சில மரங்களில் நூற்றுக்கணக்கான வௌவால்கள்

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.


சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.


அதிசய நூபுர கங்கை

பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

விழாக்கள் விவரம்

இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.

பயண வசதி

மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments