கொடிய நோய்களை அகற்றும் பத்ரகாளி அம்மன் கோவில்
இலங்கையில் எண்ணற்ற ஆலயங்கள், தமிழ் மக்களின் கலைகளையும், கலாசாரத்தையும் காப்பாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழர்களின் பெருமையாக விளங்கும், பத்ரகாளியம்மன் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கை நாட்டின் வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ள, உடப்பு என்ற கடற்கரை கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
தல வரலாறு
கி.பி. 1850-ல் இந்தப் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள், காலரா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய்க்கு அஞ்சிய மக்கள், பயத்தில் ஊரை விட்டு காலி செய்ய முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காளி பக்தரான கொத்த கிழவன் என்பவர், இறையருள் வந்து ஆடியபடி, அருள்வாக்கு கூறினார்.
“யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. காளியான நான் உங்கள் ஊரில் வாழ்கிறேன். உங்கள் அனைவரையும் நான் காப்பாற்றுவேன். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அதாவது, பச்சை ஓலை கொண்டு எனக்கு குடில் ஏற்படுத்துங்கள். அதனுள் கும்பம் வைத்து, அதில் கடல் நீரை ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். அந்த நீரில் விளக்கெரியும். கும்பத்தில் வேப்பிலைக் கொம்பை வையுங்கள். அந்த வேப்பிலை கொம்பானது, 10 நாட்களில் பூத்துக் காய்த்து குலுங்கும்” என்று கூறினார்.
அதன்படியே அந்த பகுதி மக்கள் அனைவரும், அம்மனுக்கு பச்சை ஓலை கொண்டு, குடில் அமைத்து வேப்பிலை கும்பம் வைத்தனர். அனைத்தும் அந்த அருள் வாக்கின் படியே நடந்தது. அதன்பின்னர், ஊரில் பரவியிருந்த நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது. மக்களும் நோய்களில் இருந்து முற்றிலுமாக நீங்கி, மீண்டும் இன்பமாக வாழத் தொடங்கினர். அதன்பின் ஆண்டுதோறும் இந்த வழக்கத்தின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆலய விழா
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பரணி நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று ‘வேள்வி விழா’ நடைபெறும். அன்றைய தினம் கால்நடை பலி கொடுக்கப்படும். ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, பத்து நாட்கள் விழாவை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த விழா காலத்தில் மட்டும் சைவர்களாக இருந்து விழாவை வெகு சிறப்பாக நடத்துகின்றனர். கி.பி. 1900-ல், காசியில் இருந்து வந்த கங்காதர சுவாமிகள், இந்த ஆலயத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது இந்தப் பகுதி மக்கள், நாள் தவறாமல் மீன்பிடித் தொழிலை செய்து வருவதையும், அம்மன் வழிபாட்டில் குறை இருப்பதையும் கண்டு மனம் வருந்தினார்.
இதையடுத்து அவர் இந்தப் பகுதி மக்களிடம், வாரத்திற்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை அன்று மட்டும் மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுமாறு சத்திய வாக்கு பெற்றுக் கொண்டார். அதன்படி இன்றும் கூட இந்தப் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்வதில்லை. அன்றைய தினம் அம்மனை வழிபட்டு வருகின்றனர். 1920-ல் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. 1950-ல் ஆலயத்தில் பிற பரிகார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1982-ல் இந்த ஆலயம், மீண்டும் புனரமைக்கப்பட்டு, வெகு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொன்மை சிறப்பு
உடப்பு கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்கள், இந்திய வம்சாவழி சேர்ந்தவர்கள் ஆவர். ராமேஸ்வரத்தில் உள்ள ‘அக்கா மடம்’, ‘தங்கச்சி மடம்’ பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். மீன்பிடித் தொழிலை தங்களுடைய வாழ்வாதாரமாக கொண்டவர்கள். கி.பி. 1650-ல் இவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த கமலக்கன்னி என்ற அழகிய இளம் பெண்ணை மணம் புரிய இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் விரும்பினான். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லாததால், உறவினர்களும்கூட அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட மன்னன், அந்தப் பகுதியையே அழித்து, பெண்ணை திருமணம் செய்வது என முடிவுக்கு வந்தான். மன்னனின் கோபத்தில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பகுதியில் வாழ்ந்த 18 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், 18 படகுகளில் ஏறி, பாக் ஜலசந்தி வழியாக இலங்கையை நோக்கி பயணமானார்கள்.
இதுபற்றி அறிந்த மன்னன், மற்றொரு படகில் அவர்களை துரத்திச் சென்றான். நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது, மன்னனிடம் இருந்து தப்பிப்பதற்காக, கமலக்கன்னி கடலில் குதித்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். கமலக்கன்னி இறந்ததும், இனி தான் அவர்களை துரத்துவதில் உபயோகம் இல்லை என்பதை உணர்ந்து மன்னன் தன்னுடைய நாடு திரும்பினான். 18 படகுகளில் சென்றவர்களும், இலங்கையில் உள்ள உடப்பு என்ற பகுதியில் குடியேறினர். அங்கு மானத்துக்காகவும், தங்களுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த கமலக்கன்னியை, தங்களுடைய குலதெய்வமாக நினைத்து மதித்து வழிபடத் தொடங்கினர். ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று படையல் வைத்து தங்களைக் காத்தருளுமாறு வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இலங்கை உடப்புப் பகுதியில் பார்த்தசாரதி திரவுபதி அம்மன், அய்யனார், மாரியம்மன் கோவில்களில், பிற மத வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ள இதில் மிகப்பெரிய ஆலயமாக திரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கடற்கரை கிராமத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். என்றாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இங்குள்ள பத்ரகாளியம்மன், தன்னை வழிபடுபவர் களுக்கு நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இந்த ஆலயத்தில் வழங்கப்படும் ‘காயம்’ என்னும் நைவேத்திய பிரசாதம், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு, குழந்தை வரம் அருளும் வரப்பிரசாதமாக திகழ்கின்றது.
ஆலய அதிசயம்
தல வரலாற்றில் கூறியபடி, ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாவில், இன்றளவும் கடல் நீரைக் கொண்டே விளக்கு ஏற்றுகிறார்கள். அது சுடர் விட்டு எரியும் அதிசயத்தைக் காண பக்தர்கள் திரள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. அதே போல் விழாவின் கோவில் கும்பத்தில் நட்டு வைக்கப்படும், வேப்பிலைக் கொம்பு, பத்து நாட்களில் பூத்துக்குலுங்கி காய் காய்த்து பழமாகும் அதிசயமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது, இத்தல பத்ரகாளி அம்மனின் சக்தியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
அமைவிடம்
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில்தான் உடப்பு என்ற அழகிய கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. இது கொழும்புக்கு வடக்கே 105 கிலோமீட்டர் தூரத்திலும், சிலாபம் நகரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. பஞ்சேஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் என்ற பழமையான சிவாலயம், இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments