தீராத வினைகளைத் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்!
உடல்நோய் மட்டுமல்ல, மனிதனுக்கு ஏற்படக்கூடிய எந்தவகையான நோயையும் போக்கக்கூடியது கந்த சஷ்டி கவசம். மந்திர நூலான இதைத் தினமும் படித்தால் வினைப்பயன் மட்டுமல்ல, எல்லா நோய்களும் ஓடிவிடும் என்பது ஆன்மிக நம்பிக்கை. ஒரு காலத்தில் தீராத நோயாக இருந்த வயிற்று வலியைப் போக்கிக்கொள்ள மந்திரமாக அருளப்பட்ட கந்த சஷ்டி கவசம் தோன்றிய விதமே அலாதியானது.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட தொண்டை மண்டலத்தில், வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வீராசாமிப் பிள்ளை. நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துவந்தார். சாதாரண கணக்கர் வேலை பார்த்து வந்த அவருக்கு, கந்தவேல் முருகனிடம் மட்டும் பக்தியும், காதலும் இருந்துவந்தது. முருகனின் திருவருளால் 1857-ல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவராயர் என்ற பெயர் சூட்டினார். இக்குழந்தைதான், கடும் தவத்தினால் தேவராய சுவாமிகள் ஆனதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மேல்கல்வி கற்று வியாபார நிமித்தமாகப் பெங்களூர் சென்று அங்கு தனது வணிகத் தொழிலை தேவராய சுவாமிகள் கவனித்து வந்தார். இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெங்களூர் வந்தபோது, தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார். தேவராய சுவாமிகள், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் அணுக்கத் தொண்டராக இருந்து, தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை அவரிடம் காட்டி பிழைத்திருத்தம் செய்துகொண்டார். அன்னைத் தமிழிலும், ஆன்மிகத்திலும் ஊறித் திளைத்த தேவராய சுவாமிகள், தணிகாசலமாலை, பஞ்சாக்ஷ்ர தேசிகர் பதிகம், சேடமலை மாலை ஆகிய நூல்களை இயற்றினார்.
ஒரு சமயம், தேவராயர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். என்னென்னவோ சிகிச்சை மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. மருத்துவமனைகள் அனைத்தும் அவரைக் கைவிட, வாழ்க்கையே வெறுத்து, கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்குச் சென்றார். அவர் அங்கு வந்த நேரம், கந்த சஷ்டி விழா களை கட்டத் தொடங்கியிருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி விழாவில் 6 நாள்கள் விரதம் இருந்து, 6-வது நாள் தன் உயிரைப் போக்கிக்கொள்ளலாம் என்று எண்ணி, முதல் நாள் விரதத்தைத் தொடங்கினார்.
இயல்பாகவே கவிபாடும் திறமை கொண்டிருந்த தேவராய சுவாமிகள், முருகனின் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களைப் பாட முடிவு செய்தார். தினம் ஒன்றாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டுக்கு உரிய கவசங்களைப் பாடத் தொடங்கினார். அவர் பாடத் தொடங்கியதும், அவர் எதிர்பாராமலே வயிற்று வலி படிப்படியாகக் குறையத் தொடங்கியது. சஷ்டியின் 6-வது நாள், கவசம் பாடி முடித்ததும் வயிற்று வலி அறவே நீங்கிவிட்டது.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசங்கள் பாடினார்.
சஷ்டி கவசம் உருவான கதை..
இந்நிலையில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்ற தேவராயர், மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதையும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கினார். அன்றிரவு அவரது கனவில் பழநி முருகன் பிரசன்னமானார்.
‘உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ள அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில், செந்தமிழில் பாடு’ என்று ஆசீர்வதித்து மறைந்தான் முருகன். உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘ஹரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
மயில் மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட ‘கந்தர் சஷ்டி கவசம்’ என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.
தேவராய சுவாமிகளின் கவசப் பாமாலையை, சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
கவசங்களை எவ்வாறு ஓதுவது?
நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்க வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி ‘காக்க’ என இறைவனை வேண்டுவதும், இறைவனைத் தலையால் வணங்குவதும் முறையாகும். அதனால், உறுப்புகளை தலையில் இருந்து வரிசைப்படுத்தி இந்த வேண்டுதல் அமைய வேண்டும். அன்றாடக் கடன்களை முடித்தபின், தூய்மையான ஓரிடத்தில் அமர்ந்து, இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்ல வேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது.
பாடல்களைப் பாடி, இறைவனை வேண்டித் தொழும் கவசங்களை சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், சத்தி கவசம், விநாயகர் அகவல், நாராயண கவசம் ஆகிய ஆறு வகையாகக் கூறலாம். இவற்றில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மிக அன்பர்கள் பெரிதும் பாட வேண்டிய கவசம், கந்த சஷ்டி கவசமாகும்.
கவலைகளை, நோய்களைப் போக்கும் கந்த சஷ்டி கவசத்தை நாளும் தவறாமல் ஓதுவோம்.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவ வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டா யுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்
சண்முகம் நீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட ம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் மண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட் டோடப்
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம் ஒழ்பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
*

0 Comments