ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில்
ஆவூர் பசுபதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வசிட்டரின் சாபம் பெற்ற காமதேனு பிரமனின் அறிவுரைப்படி வழிபட்டு சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 21ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு
பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு "கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான "பட்டி' என்ற பசு உணர்ந்தது. மேருமலையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது வாயுபகவானால் வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடகிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது. பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது பல ரிஷிகளும் தவமிருந்த தலம். காமதேனு, பிரம்மன், சப்த்ரிஷிகள், இந்திரன், சூரியன், மகாவிஷ்ணு, நவகிரகங்கள், தசரதர் போன்றோர் வழிபட்ட தலம். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஐந்தடி உயரம் கொண்டது. ஏழடி உயரத்தில் வில்லும், அம்பும் ஏந்திய நிலையில் முருகப்பெருமான் காணப்படுகிறார்.
தல சிறப்புகள்
கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சான்றோர்களைத் தந்த ஊர்.
கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
இத் தலத்தின் கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments