அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு
சுமார் 1000 ஆண்டுகளும் மேல் பழமையான கோயிலாக இந்த கைலாசநாதர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் சிவலிங்கமேடு என்றழைக்கப்பட்ட இந்த இடம் காலப்போக்கில் செவிலிமேடு என அழைக்கப்படலாயிற்று என கூறுகிறார்கள்.
தல புராணங்களின் படி பாற்கடலை கடைந்து அமுதத்தை அரக்கர்கள் கையில் கிடைக்காமல் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும்படி செய்தார். தேவர்களுக்கு அமுதத்தை சமமாக பிரித்து படைக்கும் சமயம் சுவர்ணபானு என்கிற அசுரன் அமிர்தம் சாப்பிடும் ஆசையில் தனது உருவத்தை தேவர் போல மாற்றிக்கொண்டு, தேவர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சூரிய, சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை வாங்கி பருகி விட்டான். இவன் அசுரன் என்பதை அறிந்த சூரிய சந்திரர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு சுவர்ணபானுவின் தலையை வெட்டினார். அமிர்தத்தை அவன் சாப்பிட்டதால் அவன் இறக்கவில்லை, மாறாக வெட்டுப்பட்ட தலைக்கு கீழ் பாம்பின் உடலும், தலையில்லா உடலின் கழுத்தில் ஐந்து தலை பாம்பு முகமும் தோன்றியது.
இந்த இரண்டும் ராகு – கேது எனப்பட்டனர். இந்த ராகு – கேது ஆகிய இருவரும் காஞ்சிபுரம் வந்தடைந்தனர். இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவனை வழிபட்டு தங்களின் செயலுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டனர். சிவனும் அவர்களை மன்னித்தருளி ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவகிரக பதவி தந்தருளினார்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிறப்புக்கள்
இந்த கோயிலிருக்கும் செவிலிமேடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு புதர் மண்டி கிடந்தது. அப்போது ஒரு அரசமரத்தடியில் சிவலிங்கம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 16 பட்டைகளுடன் கூடிய அந்த சோடஷ லிங்கத்தை காஞ்சி பெரியவரின் வழிகாட்டுதலோடு இம்மக்கள் வழிபட்டனர். ராகு – கேது இருவராலும் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கம் இது என்பதால் ராகு – கேது தோஷம் பிதுர் சாபங்கள், களத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் பலன் உண்டு என கூறுகிறார்கள். கோயில் அமைவிடம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு என்கிற பகுதியில் அமைந்துள்ளது.
கோயில் நடை திறப்பு
காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் செவிலிமேடு காஞ்சிபுரம் மாவட்டம்
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments