ஆத்தூர் ஸ்ரீ தலையாட்டி விநாயகர் கோவில் சிறப்புக்கள்


நாம் செய்கிற எந்த ஒரு செயலும் சிறப்பான வெற்றிகளை பெற வேண்டும் என்கிற விருப்பம் நம் அனைவருக்குமே இருக்கும். பக்தர்கள் எளிமையாக அணுகும் விதமாக இருக்கும் தெய்வம் “விநாயகப்பெருமான்” ஆவார். அவரை வழிபட்டு தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை என்பது நிச்சயம். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் “ஆத்தூர்” பகுதியில் அமைந்திருக்கும் “ஸ்ரீ தலையாட்டி விநாயகர்” கோவில் பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தலையாட்டி விநாயகர் கோவில் தல வரலாறு

ஆயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான கோவிலாக தலையாட்டி விநாயகர் கோவில் இருக்கிறது. தல புராணங்கள் படி “வசிஷ்ட முனிவர்” நாடு முழுவதும் புனித யாத்திரை மேற்கொள்ளும் பொது தான் செல்லும் இடங்களில் எல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்து வந்தார். அப்படி வசிஷ்ட முனிவர் இந்த ஆத்தூர் பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து தவமிருந்த போது, திருவண்ணாமலையில் இருக்கும் சிவபெருமானின் கோலத்தில் சிவனை தரிசிக்க விரும்பினார் வசிஷ்டர். அவரின் விருப்பத்தை ஏற்ற சிவன் அக்கோலத்திலேயே வசிஷ்டருக்கு காட்சியளித்து அவருக்கான வரத்தை அளித்தார்.

காலப்போக்கில் வஷிஸ்டர் ஸ்தாபித்த சிவலிங்கம் ஆற்று மணலில் புதைந்து போனது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியை ஆண்ட “சிற்றரசர் கெட்டி முதலி” என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, தான் இருக்கும் லிங்க திருமேனி ஆற்று மணலில் புதையுண்டது குறித்தும், அங்கு தனக்கான கோவில் கட்டுவதற்கான செல்வங்களை கொண்ட புதையலும் புதைந்திருப்பதாக கூறி மறைந்தார்.தனது கனவில் வந்த தகவல்களை கொண்டு ஆற்று பகுதிக்கு சென்ற அரசர் அங்கு ஒரு சிவலிங்கம் புதைந்து கிடப்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சிவலிங்கமும் கோவில் கட்டுவதற்கான புதையலும் கனவில் சிவபெருமான் கூறிய படியே இருந்ததை கண்டு அதிசயித்து கோவில் கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

எந்த ஒரு காரியத்தையும் விநாயகரை வழிபட்ட பின்பே தொடங்குவது மரபு. சிவன் கோவில் கட்டுவதற்காக, இங்கு கோவில் கொண்டிருக்கும் விநாயகரிடம் சிற்றரசர் அனுமதி கேட்ட போது, விநாயகர் அனுமதியளித்ததுடன், அவரை அக்கோவில் கட்டுமானத்தில் மேற்பார்வையாளராக இருந்து கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்தார். கோவில் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தான் கோவிலை சரியாக கட்டடியிருக்கிறேனா என விநாயகப்பெருமானிடம் கெட்டி முதலி கேட்ட [போது விநாயகர் தனது தலையை அசைத்து ஆம் என ஆமோதித்ததாக கூறுகிறது வரலாறு. அன்று முதல் இந்த ஆலய விநாயகர் தலையாட்டி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

தலையாட்டி விநாயகர் கோவில் சிறப்பு 

விநாயகர் சதுர்த்தி இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆத்தூர் வாழ் மக்களும் சுற்று வட்டார பகுதி மக்களும் தாங்கள் எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பு இந்த தலையாட்டி விநாயகர் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு, அவரின் அனுமதி கேட்டு பின்பு தொடங்கினால் அக்காரியம் சிறப்பான வெற்றியடைவதாக பக்தர்கள் கூறுகின்றனர். புது வீடு கட்டுதல், திருமணம் வரம், புத்திர பாக்கியம் மற்றும் இதர பாக்கியங்கள் கிடைக்க இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். 

கோவில் அமைவிடம்: ஸ்ரீ தலையாட்டி விநாயகர் ஆலயம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூர் எனும் ஊரில் அமைந்திருக்கிறது. ஆத்தூருக்கு செல்ல சேலம் நகரத்தில் இருந்து பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. 

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. கோவில் முகவரி: ஸ்ரீ தலையாட்டி விநாயகர் ஆலயம் ஆத்தூர் சேலம் – 636 102

 தொலைபேசி எண் 4282 – 320607

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments