திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 


திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் தலம்.

தல வரலாறு

திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.

கோயில் ஒழுகு

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

கோயில் அமைப்பு

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.



Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments