உங்களின் எத்தகைய தோஷங்களும் நீங்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்
உலகம் அனைத்தையும் உயிர்ப்பித்து காக்கும் கடவுளாக திருமால் இருக்கிறார். அந்த திருமாலின் பத்தினியாகிய லட்சுமி தேவி மக்களின் செல்வத்திற்கும், வளமைக்கும் காரணமாக இருக்கிறார். தன்னை வழிபாடும் பக்தர்களின் துன்பம் போக்கும் அன்னையாக அந்த மகாலட்சுமி விளங்குகிறார். அப்படி அனைவரின் சங்கடங்களை தீர்க்கும் “கோலாப்பூர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் சிறப்புக்கள்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் வரலாறு
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது கோலாப்பூர் மகாலட்சுமி கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தேவி இருக்கிறார். பாரதத்தில் இருக்கும் தேவி வழிபாடு சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. மராட்டிய கட்டிடக்கலையின் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
தல புராணங்களின் படி கோலாசுரன் எனும் அரக்கனை அம்பாள் சிம்ம வாகனத்தில் வந்து வதம் புரிந்த இடமாக இந்த கோலாப்பூர் தலம் இருக்கிறது. மேலும் பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விட இந்த கோலாப்பூர் பகுதியை மட்டும் தனது வீரத்தால், தன் கரத்தை கொண்டு தூக்கி பிடித்து லட்சுமி தேவி காத்ததாக தல புராணம் கூறுகிறது.
கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் சிறப்புக்கள்
இந்த கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலை சுற்றி 50 சிறு கோயில்களும், ஊர் முழுவதும் சுமார் 3000 சிறு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது அதிசயம் ஆகும். மேலும் இக்கோயிலில் ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி கோயிலின் கர்ப்ப கிரக பால்கனி வழியாக லட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. லட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது தாயாரை வணங்குவது மிகுந்த நன்மை தரும் என கூறுகிறார்கள். மகாதுவாரம் எனப்படும் மேற்கு வாயிலில் அழகிய தீபஸ்தம்பங்ககளை காண முடியும்.
அன்னையின் சிலை 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், அச்சிலை மிகவும் அபூர்வமான இரத்தின கல்லில் செதுக்கப்பட்டது என கூறுகிறார்கள். ஒருவருக்கு ஏற்படும் எத்தகைய தோஷங்களும் இக்கோயிலுக்கு வந்து லட்சுமி தேவியை வணங்குவதால் அது நீங்க பெறும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.
கோயில் அமைவிடம் அருள்மிகு கோலாப்பூர் மகாலட்சுமி தேவி கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.
கோயில் நடை திறப்பு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி அருள்மிகு கோலாப்பூர் மகாலட்சுமி தேவி கோயில் கோலாப்பூர் மகாராஷ்டிரா மாநிலம் – 416001
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments