பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயுதங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.
மாடு மேய்க்கும் கோவலர்களும் இந்த செண்டாயுதத்தை ஏந்துகின்றனர். அவர்களின் தெய்வமான கண்ணபிரான் செண்டேந்திக் காட்சி தருகிறார். செண்டேந்தி நிற்கும் கண்ணபிரானை செண்டலங்காரர் என்றும் ராஜகோபாலசுவாமி என்றும் அழைக்கின்றனர். ஐயனார் முதலிய தெய்வங்கள் செண்டேந்தி நிற்பதை பல இலக்கியங்கள் கூறுகின்றன. கச்சிக் காமக்கோட்டத்தில் இருக்கும் ஐயனார் கரிகால் சோழனுக்குச் செண்டாயுதம் அளித்ததாகவும் அதைக்கொண்டு அவன் மேருவை அடித்து அடக்கினான் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் மதுரையில் முருகனுக்கு செண்டளித்ததைப் போலவே மற்றோர் தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலும் செண்டை அளித்துள்ளார். ஆனால் சிவபெருமான் இங்கு முருகனுக்கு அளித்த செண்டானது பகைவர் மீது செலுத்தும் ஆயுதமல்ல. இது பூவினால் புனைந்த செண்டாகும். இது மகிழ்ச்சியின் அடையாளமாகும். திருமணங்களில் மணமக்கள் கையில் பூச்செண்டு கொடுக்கும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளதாகும். சிதம்பரம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள சிவத்தலம் வைத்தீஸ்வரன் கோயிலாகும்.
இதன் புராண, தேவாரப் பெயர் புள்ளிருக்கு வேளூர் என்பதாகும். (சம்பாதி, சடாயு என்னும் கழுகரசர்களான புள் இனம், இருக்கு ஆகிய வேதம், வேளாகிய முருகன் ஆகியோர் சிவபெருமானை வழிபட்டுப்பேறு பெற்ற தலம் என்பதால் இது புள்ளிருக்கு வேளூர் ஆனது என்பர். இங்குள்ள முருகனின் உலாத்திருமேனி மிகவும் புகழ் பெற்றதாகும். இவரை செல்வமுத்துக்குமரர் என்று அழைக்கின்றனர். இந்த முருகன் செண்டேந்திய சேவகனாகக் காட்சி தருகிறார். இவர் சதாகாலமும் சிவபூசை செய்து கொண்டிருக்கிறார். அத்துடன் சிவபெருமான் இவருக்கு மலர்ச்செண்டு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தினமும் மூலவரிடம் சார்த்தப்பட்ட பன்னீர்ப்பூச்செண்டு முருகன் கரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
பங்குனிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் இந்த முருகனைக் கருவறைக்கு முன்பாக எழுந்தருளி வைத்து முருகன் சிவபூசை செய்யும் ஐதீக விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்பூசையின் முடிவில் சிவலிங்கத்தின் மீது அணிவிக்கப்பட்ட பொன்னாலானதும் வைரம் முதலான நவமணிகள் இழைக்கப்பட்டதுமான பூச்செண்டை கருவறையில் இருந்து எடுத்து வந்து இவரது கரத்தில் வைக்கப்படுகிறது. இது காணற்கினிய காட்சியாக இருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமி வைத்தியநாதர் பிராகாரத்தின் வடமேற்கு முனையில் கிழக்கு நோக்கி அமைந்த பெரிய சந்நதியில் வெள்ளி மஞ்சத்தில் இந்த செல்வமுத்துக் குமாரசுவாமி எழுந்தருளியுள்ளார்.
கிருத்திகை தோறும் இவருக்கு பெரிய அளவில் அபிஷேகமும் அலங்காரமும் வெள்ளிரத ஊர்வலமும் நடத்தப்படுகின்றன. செல்வ முத்துக்குமரன் சதாகாலமும் அலங்கார மூர்த்தியாகவும், உலாத்திரு மேனியாகவும் இருப்பதால் அவருக்கு நாள் வழிபாட்டில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அவரது பீடத்தில் வைக்கப்பட்டுள்ள முத்து லிங்கேஸ்வரருக்கே அவை நடத்தப்படுகின்றன.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments