ஆயுள் விருத்தி தரும் ஜலகண்டேஸ்வரர் கோவில்.

 ஆயுள் விருத்தி தரும் ஜலகண்டேஸ்வரர் கோவில்.





ஜலகண்டேஸ்வரர்
ஜலகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற ஊரானது வேலங்காடு என்ற புராண பெயரைக் கொண்டது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அருள் பாவிக்கும் சிவ பெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
இந்தக் கோவிலில் விஷ்ணு மஹாலக்ஷ்மி தாயாருடனும், பிரம்மா சரஸ்வதி தேவியுடனும், சிவபெருமான் பார்வதியுடனும் சேர்ந்து காட்சி தருகின்றனர். மும்மூர்த்திகளையும், முப்பெரும் தேவிகளையும் ஒன்றாக தரிசனம் பெறும் பாக்கியத்தை இந்த கோவிலுக்கு சென்றால் பெறலாம்.
இந்தக் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. இந்த ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் பின்புறத்தில் காலபைரவர் காட்சி தருகின்றார். கங்கை, சிவன், பைரவர் மூவரையும் ஒன்றாக தரிசிக்கும் அரிதான காட்சியும் இங்குதான் காணப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதாக வரலாறு கூறுகிறது.
தல வரலாறு
சப்தரிஷி அத்திரி, இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காலத்திற்கு பின்பு, லிங்கம் இருக்குமிடம் வேலமரக்காடாக மாறிவிட்டது. லிங்கத்தை புற்று மூடி கொண்டது. பொம்மி என்ற சிற்றரசர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், புற்றில் மூடப்பட்டிருந்த லிங்கம் இருக்கும் இடத்தை, அந்த சிற்றரசருக்கு கூறி, கோவில் எழுப்பும்படி கூறினார். ஈசனின் கட்டளையை ஏற்ற பொம்மி இந்த கோவிலை எழுப்பினார்.
பலன்கள்
ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, திருமணத்தில் இருக்கும் தடை நீங்க, பல்லி தோஷம் நீங்க, கண் திருஷ்டி நீங்க இந்த சிவபெருமானை வேண்டிக்கொள்ளலாம்.
செல்லும் வழி:
வேலூர் பஸ் நிறுத்தம் அருகில் இந்த கோவிலானது அமைந்துள்ளது. தரிசன நேரம்: காலை 06.30AM – 01.00PM மாலை 03.30PM – 08.00PM
முகவரி:

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்,
கோட்டை,
வேலூர்-632 001.

Post a Comment

0 Comments