குழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

 

குழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்


ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்கள் உள்ளன. இந்த வேதங்களின் துணைகொண்டு, பிரம்மதேவன் படைப்புத் தொழிலை செய்து வந்தார். இந்த நிலையில் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மாவிடம் இருந்து அந்த 4 வேதங்களையும் திருடிச் சென்று ஒளித்து வைத்தனர். இதன் காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு, குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய -சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கச் சென்றார்.

அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை வென்று, வேதங்களை மீட்டார். இதையடுத்து உலகம் இருள் நீங்கி ஒளிபெற்றது. அசுரர்கள் கை பட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்று பட்டு வேதங்கள் புனிதமடைந்தன.

அசுரர்களுடன் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரம் குறையாமலே இருந்தார். அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார்கள். இதனால் அவர் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்விக்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியின் அருளோடு செல்வமும் சேரும் என்பதாலேயே, லட்சுமியை தனது இடபாகத்தில் வைத்திருக்கிறார், ஹயக்ரீவர். இவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.

மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments