மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரை கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். அக்காலத்தில் இந்த இடம் ஒரு துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆண்டு கொண்டிருந்தான். இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.
மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவையே. ஒற்றைக்கல் யானை, அருச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.
மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம்.
7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம். கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது பல்லவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது.
பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.
கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.
மண்டபங்கள் – வராக மண்டபம், மகிடாசுரமர்த்தினி மண்டபம், இராமானுஜ மண்டபம், மும்மூர்த்திகள் மண்டபம், கோடிக்கல் மண்டபம், கோனேரி மண்டபம், அதிரணசண்ட மண்டபம்
ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்
இரதங்கள்
இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.
மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்
பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள், வலையன்குட்டை இரதம், பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள், கணேச இரதம். ஐந்து இரதங்கள் – தர்மராஜ ரதம், பீம ரதம், அருச்சுன ரதம், திரௌபதை ரதம், நகுல சகாதேவ இரதம்
முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 – 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments