தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ஆம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது. இந்தக் கோயிலில் காணப்படக்கூடிய மிக நுணுக்கமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளை தமிழ்நாட்டின் வேறெந்த கோயிலிலும் காண முடியாது. கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப் போற்றப்படுகின்றன.
வரலாறு சோழ மன்னர்களில் 2-ஆம் ராஜராஜனால் 12-ஆம் நூற்றாண்டில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் ராஜராஜன், அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
பெயர்க்காரணம்
ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலுக்கு ஐராவதேஸ்வரர் கோயில் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
சிற்பிகளின் கனவு
கட்டிட வல்லுனர்களால் "சிற்பிகளின் கனவு" என்று வர்ணிக்கப்படும் இந்தக் கோயில் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
கொனார்க் பாணி வடிவமைப்பு ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் கொனார்க் கோயிலை ஒத்துள்ளது.
ராஜ கம்பீர மண்டபம்
ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சென்டிமீட்டர் அளவு சிற்பங்கள்!
ராஜ கம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
எமன் பெற்ற சாப விமோச்சனம்!
எமதர்மன் தான் பெற்ற சாபத்தால் உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோச்சனம் பெற்றதாக நம்பப்படுகிறது.
புதுமைகள்
மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார், மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். மேலும் கோயில் கருவரையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments