திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

 திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

“தமிழர்களின் கடவுள்” என்று முருகப்பெருமானுக்கு பெயருண்டு. தமிழ் மக்களின் சரித்திரத்தில் முருகனின் வழிபாடு எப்போதும் இருந்து வந்திருப்பதை நாம் அறிகிறோம். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்று முருகன் மலைமீது கோவில் கொள்வதை பற்றி கூறப்படும் ஒரு வாக்கியமாகும். ஆனால் பொங்கி வரும் கடல் அலை “செந்திலாண்டவனின்” பாதம் பணியும் கடற்கரையில் கோவில் கொண்டிருக்கும் “திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின்” சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கந்த புராணத்தின் படி கச்சியப்ப சிவாச்சாரியார் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்தையும் காக்கவும், அசுரர்களை அழிக்கவும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் யாகம் வளர்த்து, கும்பத்தில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியாரும் மற்றவர்களும் முருகனுக்கு சஷ்டி நோன்பு இருந்தனர். இதனால் மனம் குளிர்ந்த முருகன் அவர்களுக்கு அருளினார். இதனை நினைவு கூறியும் விதமாகவே ஐப்பசி மத அமாவாசைக்கு பிறகு கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கு உதவ சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்த ஆறு சக்திகள், ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, ஆறு உருவங்களும் ஒன்று சேர்ந்து, முருகனாக உருப்பெற்றார். ஆறு முகத்தை தனது உருவில் கொண்டிருப்பதால், முருகனுக்கு “ஆறுமுகம்” என்ற பெயரும் உண்டு. சூரபத்மனுடன் போர்புரிய இந்த கடற்கரைக்கு முருகப்பெருமான் வந்த போது, நவகிரகங்களில் சுபகிரகம் ஆனவரும், தேவர்களுக்கு குருவாக இருப்பவரான “குரு பகவான்” இங்கு தவமியற்றி கொண்டிருந்தார். சிவனின் மைந்தனான முருகனை பணிந்து வணங்கிய குரு பகவான் அசுரர்களின் வரலாற்றை பற்றி கூறி, சூரபத்மனை போரில் வெல்வதற்கு முருகப்பெருமானுடனும், அவரது படையினருடனும் ஆலோசனை செய்து சிறந்த அறிவுரைகளை வழங்கினார். இதனால் மிகவும் மகிழ்ந்த முருகப்பெருமான் தான் இங்கே கோவில் கொள்ளும் வரத்தை அருளினார். இதனால் மகிழ்ந்த குரு பகவான் விஸ்வகர்மாவை அழைத்து இங்கு கோவில் எழுப்பினார். எனவே இங்கு கோவில் கொண்டிருக்கும் செயந்தி நாதரை வணங்குவதால் குருபகவானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.
முருகனுக்கு ஆறு படை வீடுகள் என்று வழக்கமாக கூறப்படும் ஒரு வாக்கியமாகும்.போர்வீரர்களின் குழுமத்தை படை என அழைப்பார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அளிப்பதற்கு தனது போரிடும் படை வீரர்களோடு தங்கியிருந்த இடம் திருச்செந்தூர் தலமாகும். எனவே “படை வீடு” என அழைக்கப்படும் தகுதி திருச்செந்தூருக்கு மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் தன்னை காண வரும் பக்தர்களின் அனைத்து கஷ்டங்களையும் போக்கும் முருகனின் “ஆற்றுப்படுத்தும்”( ஆறுதல் அளிக்கும்) வீடுகள், “ஆறு படைவீடுகளாக” மாறிப்போனது.
சூரபதம்னை ஐப்பசி மாதம் சஷ்டி தினத்தில் முருகபெருமான் வதம் செய்ததால், இங்கு கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் மிக சிறப்பான முறையில் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் போது மக்களின் நன்மைக்காக, சண்டி யாகம் செய்யப்படுகிறது. ஆறு நாட்கள் நடக்கும் இந்த கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கில் மக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் கூடுவர்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments