புதன்கிழமையின் சிறப்புகளும்.. விரத வழிபாட்டு பலன்களும்..
வானியல் சாஸ்திரப்படி, புதன்கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.
ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
விநாயகப்பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும், இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக்கூடியவர்.
‘விக்னேஷ்வரன்’ என்று அழைக்கப்படுகின்ற விநாயகப்பெருமான் பிரச்சினைகளையும் உங்களுக்கு இருக்கின்ற காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும், நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மிகத் தன்மையையும் அதிகப் படுத்துவார் விநாயகர்.
இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். செய்யும் வேலை வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அதற்கான காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார்.
விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அழியும்.
விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும், புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவின் குறியீடாகக் கூறப்படுகிறது.
உங்களை ஆன்மிக வழியில் சாதுவான குணங்களுடன் அழைத்துச் செல்லக்கூடியது விநாயகர் வழிபாடு. இந்த வழிபாடானது, உங்களுடைய திறமையை அசாத்திய மானதாக மாற்றும். எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உங்கள் பக்கமே நிற்கும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments