புண்ணிய காலத்தில் வழிபட்டால் அருள்பாலிக்கும் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் அருள் மிகு புவனேஸ்வரி அம்மனை தரிசிக்க தமிழகம் முழுவதிலிமிருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் அண்மைக்காலத்தில் உருவானதாகும்.
இக்கோயில் தோன்றியது குறித்த ஒரு கதையும் உண்டு. கேரள மாநிலம் திருவாங்கூரில் நேர்மையும் நீதி வழுவாத நீதியரசர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் விசாரணை செய்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலையாளி எனத் தீர்க்கமாகத் தெரிந்து சட்டப்படி தண்டைனை வழங்க இயலாமல் போனது. இதனால் மனமுடைந்த நீதிபதி தனது பதவியை துறந்து உலக வாழ்க்கையை வெறுத்து துறவியாகி அவதூதராக நாடெங்கும் சுற்றி வந்தார். புதுக்கோட்டைக்கு வந்த அவர் தற்போது புவனேஸ்வரி கோயில் அமைந்துள்ள இடத்தருகே தங்கினார்.
அப்பகுதி மக்கள் இவரை ஜட்ஜ் சுவாமிகள் என அழைத்து வந்தனர். சில ஆண்டுகள் வாழ்ந்தபின் 1936 -ல் இங்கேயே அவர் மறைந்தார். இதையடுத்து அவரது பக்தர்கள் சமாதி கோயிலை அமைத்தனர். தற்போது ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் என அழைக்கப்படுகிறது.
இதன் பிறகு பதினாறு ஆண்டுகள் கழித்து அவதூதரின் பக்தரான ஸ்ரீ சாந்தனாந்தசுவாமி எனும் ஞானியார் புதுக்கோட்டைக்கு வருகை தந்து ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் அருகே புவனேஸ்வரி அம்மனுக்கு ஒரு கோயிலை எழுப்பினார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் யாகம் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதால், நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அச்சமயம் இங்கு கூடுகின்றனர்.
நவராத்திரி விழா சிறப்புகள்: ஸ்ரீ சரந் நவராத்திரி பெரு விழா எனும் நிகழ் ஆண்டுக்கான நவராத்திரி வைபவம் நிகழும் ஐப்பசி மாதம் முதல் நாள்(17.10.2020) சனிக்கிழமை தொடங்கி ஐப்பசி மாதம் 9 -ஆம் நாள்(25.10.2020) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. நவராத்திரி மகோத்ஸவ விழாவில் தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரை சிறப்பு பூஜைகளும், மாலையில் மகாதீபாராதனை வழிபாடும் நடைபெறுகிறது.
புவன மாதாவின் புனிதக்குழந்தைகளாகிய பக்தர்கள் அனைவரும் இப்பெரு விழாவில் பங்கேற்று அறிவு நலம், மன நலம், சொல் நலம், செயல் நலம், உடல் நலம், உறவு நலம், பொருள் நலம் ஆகிய அனைத்து நலன்களும் பெற்று பிறவிப்பெரும்பயனை அடையலாம் என அழைக்கிறார் ஸ்ரீ புவனேஸ்வரி அவதூத வித்யா பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த சுவாமிகள்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments