ஆயுள் அதிகரிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரர்... கல்வி வளம் தரும் லட்சுமி வராஹர்

 ஆயுள் அதிகரிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரர்... கல்வி வளம் தரும் லட்சுமி வராஹர்

வேலூர்: பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி வராஹருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இம்மாதம் 13, 14ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாணைப்படி ரத்தினகிரி பாலமுருகன் அடிமை, ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா, கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை ஸ்ரீ மகாதேவ சித்தர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சனிபகவான் நீதியரசர்... தவறு செய்பவர்களை கண்டிப்பாக தண்டிப்பார். அதே நேரத்தில் நல்லவருக்கு நல்லவர். கெட்டது செய்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை தருவார். சனிபகவான் ஆயுள்காரகன், தொழில்காரகன். கண்டிப்பு காட்டுவதிலும் கறார் காட்டுவதிலும் நீதிமான்.
நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றையும் கண்காணித்து அதற்கேற்ப தண்டனை தருகிறார். ஏழரை சனியோ, அஷ்டம சனியோ, அர்த்தாஷ்டம சனியோ, கண்டச்சனியோ எதுவென்றாலும் கலங்க வேண்டாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை சரணடைந்தால் போதும் நன்மை செய்வார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பகவானுக்கு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடாத்தில் தங்கத்தில் சனீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சனி பகவான் ஆலயங்கள்
ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில பரிகாரக் கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர், திருகொள்ளிக்காடு, திருக்கோடிக்காவல், குத்தாலம், போன்ற முக்கிய ஆலயங்களில் தனி சன்னதிகளில் மூர்த்தியாக காட்சி தருகிறார்.
சனிபகவானுக்கு ஹோமம்
கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சனி சாந்தி ஹோமம் நடைபெற்று, காலசக்கிரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய க்ஷேத்திரத்தில் பீடத்தில் சுகபிரம்மரிஷியின் ஓலைச் சுவடியில் தெரிவித்த பிரகாரம், நவக்கிரகங்களில் நீதிபதியாக உள்ள சனி பகவானுக்கு ஒரு ஆலயம் அமைக்க சுவாமிகள் முன்வந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கும் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளார்.
தங்க சனீஸ்வரர் ஆலயம்
சொர்ண சனிபகவானுக்கு உலகில் எங்கும் இல்லாதவாறு முதன் முறையாக 13 படிகள் கொண்டு பாதாளத்தில் பிரத்யோக மண்டபம் அமைத்து பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டு, உலகில் முதல் சொர்ண சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ உள்ளது என்பது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியதாகும்.
லட்சுமி வராக பெருமாள்
வராகப் பெருமாளுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. வைணவத் திருத்தலங்களில் தனிச் சன்னிதியும் உண்டு.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகவும் வரப்பிரசாதியாக, ஆதிவராஹர் கோயில் கொண்டருள்கிறார்.தாமிரபரணி நதியின் தென்கரையில் மிக அழகிய புண்ணியமான கல்யாண புரம் என்னும் கல்லிடைக்குறிச்சியில் குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூமியுடன் கூடிய வராக உருவம் கொண்ட லட்சுமிபதி நமக்கு எல்லா நன்மைகளையும் உண்டு பண்ணட்டும் என்று சங்கரதீட்சிதர் என்ற மகானின் ஸ்லோகம் இக்கோயிலின் பெருமையைக் கூறுகிறது. தாமிர பரணி மகாத்மியத்தில் மிகவும் பெருமையாக இந்த ‘திருக்கரந்தை ஆதிவராகர்' கோயில் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
அழகிய லட்சுமி வராஹர்
வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைக்கூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும், பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர். தன்வந்திரி பீடத்தில் கருங்கல்லினாலான 4 அடி உயரத்தில் அழகிய கிரீடம், ஆபரணங்கள் தரித்து, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, லக்ஷ்மி தேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தரும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பாதாள சொர்ண சனீஸ்வரர் கும்பாபிஷேகம்
வரம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கும் சொர்ண சனீஸ்வரருக்கும் தன்வந்திரி பீடத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களுக்கு இம்மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள் கடக லக்னத்தில் சுவாதி நக்ஷத்திரத்தில் கும்பாபிஷேகம் ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாணைப்படி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு வேலூர் கலெக்டர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி. ப்ரவேஷ்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நலத்துறை ஆணையர் ஆர்.நந்தகோபால், ராணிபேட்டை கோட்டாச்சியர் கே.இளம்பகவத், மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப் குமார், ராணிபேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், ஆ.வி.எஸ். குரூப் சேர்மன் கே.வி.குப்புசாமி கோவை, ஈரோடு ஸ்ரீ அம்மன் டிரஸ்ட் சேர்மன் டி.ஜெயலக்ஷ்மி, சென்னை ரெப்கோ வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.வரதராஜன், சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் ஆர்.குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments