மங்கலதேவி கண்ணகி கோவில்
தல வரலாறு
கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.
கண்ணகி கோயில் விழா
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை
தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

0 Comments