அருள்மிகு மணப்புள்ளி பகவதி அம்மன் திருக்கோயில் வரலாறு
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக அருள்மிகு பகவதி அம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக பகவதி அம்மன் இருக்கிறார்.
தல புராணங்களின் படி அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் இந்த வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோயில் கொண்டாள் பகவதி அம்மன். விவசாய நிலம் என்பதால் அறுவடைக் காலத்தில் நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள் பகவதி. அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது.
அருள்மிகு மணப்புள்ளி பகவதி அம்மன் திருக்கோயில் சிறப்புக்கள்
மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு, வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப்பற்களும் கொண்டு, அழகான ஆடைகள் அணிந்தவாறு பகவதி அம்மன் காட்சி அளிக்கிறார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள் இந்த பகவதி அம்மனுக்கு இருப்பதால் அநியாய செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் முறையிடுகின்றனர்.
அரக்கர்களை அழிக்க பகவதியம்மன் பயன்படுத்திய வீரவாள் கோயில் பின்புறம் இருக்கும் திருக்குளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் வேலை திருவிழாவின்போது அம்மனின் வாள் எடுக்கும் வெளிச்சப்பாடு சடங்கு நடைபெறுகிறது. அப்போது தெய்வ அருள் வந்த ஒருவர் குளத்தில் இறங்கி, அம்மனின் வாளை எடுத்து வந்து கோயில் சந்நிதானத்தில் வைத்து பூஜிக்கிறார். இந்த வேலை திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த திருவிழாவின் போது 15 கோவில் யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்சவாத்தியம் பாண்டி பஞ்சாரி மேளம் ஆகியவை வாசிக்கப்படுகிறது.
குருவாயூரில் சந்தன அபிஷேகம், சபரிமலையில் நெய் அபிஷேகம் என்பது போல் இக்கோயிலில் அம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் வேலை திருவிழாவில் பகவதி அம்மனுக்கு பூரண சாந்தபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து பகவதி அம்மனுக்கு பூஜைகள் செய்கின்றனர். மனநல பாதிப்பு ,நீண்ட நாட்கள் நோய்கள் பிடித்திருப்பது, கல்வித்தடை, மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற பல குறைகள் பகவதி அம்மனுக்கு சாந்தபிஷேகம் செய்து வழிபடுவதால் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கோயில் அமைவிடம்
அருள்மிகு மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது
கோயில் நடை திறப்பு அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கிறது.
கோயில் முகவரி
அருள்மிகு மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் மணப்புள்ளி, கிழக்கு யாக்கரை பாலக்காடு மாவட்டம் கேரளா

0 Comments