திருவண்ணாமலை கோவில் சிறப்பு தகவல்கள்
நமது பாரத நாடு கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த புனித பூமியாகும். எனவே இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், திருத்தலங்கள் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும். மனிதர்களாக பிறந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு இறுதியில் முக்தியடைவது தான் அனைவரின் விருப்பமாகும். அந்த வகையில் சிவபெருமான் பஞ்சபூதங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கும், “நினைத்தாலே முக்தி தரக்கூடிய” “திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை கோவில் தல வரலாறு
மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். “பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்” என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர்.
புராணங்களின் படி ஒரு சமயம் சிவ பெருமானின் தோற்றம் மற்றும் முடிவு என்ன என்பதை பற்றிய விவாதம் “சிவன், பிரம்மா, விஷ்ணு” ஆகிய மூவரிடையே எழுந்த போது சிவபெருமான் இந்த அருணாச்சல மலையில் மிகப்பெரும் அக்னி பிழம்பு உருவத்தை பெற்று நின்றார். அப்போது சிவனின் அடிப்பகுதியை காண விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டு சென்றார். பிரம்ம தேவன் ஒரு அன்ன பறவையின் உருவம் கொண்டு சிவபெருமானின் உச்சிப்பகுதியை காண விண்ணை நோக்கி பறந்தாலும், சிவபெருமானின் தொடக்கம் எது என்று அறிய முடியாமல், சோர்ந்து தான் சிவனின் உச்சிப்பகுதியை கண்டதாக பொய்யை கூறினார். இந்த பொய்யை அறிந்த சிவபெருமான் பிரம்ம தேவனுக்கு இந்த பூவுலகில் எங்குமே கோவில் அமையாதவாறு சபித்து விட்டார். இந்த சம்பவத்திலிருந்து இத்தல சிவபெருமானை “அடி முடி காண முடியாத அண்ணாமலையார்” என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

0 Comments