ராமேஸ்வரம் கோவில் சிறப்புகள்
இந்த உலகில் தோன்றிய எந்த ஒரு உயிரும் இறைவன் தோற்றுவித்தது தான். இதில் மனிதர்கள் உட்பட எந்த ஒரு விலங்கை கொன்றாலும், கொன்றது இறைவனாகவே இருந்தாலும் அந்த பாவச்செயலின் வினைகளிலிருந்து தப்ப முடியாது. அப்படி சிறந்த சிவ பக்தனான “”ராவணனை” கொன்றதால் ஏற்பட்ட “பிரம்மஹத்தி தோஷத்தை” அயோத்திய அரசன் “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி”” போக்கி கொண்ட ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத சுவாமி கோவிலை பற்றி சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ராமேஸ்வரம் தல வரலாறு
வங்காள விரிகுடா கடலில் இலங்கைக்கு சற்று அருகில் இருக்கும் தீவு தான் ராமேஸ்வரம். இந்த ராமேஸ்வரத்திலிருந்து தான் கடலின் மீது பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் அவரது வானர சேனைகளும் “இலங்கை வேந்தன்” ராவணனனுடன் போரிட்டு அவனை வீழ்த்தி, சீதா தேவியை மீட்டார்.மிகவும் பழமையான கோவிலான இதன் தெய்வம் சிவபெருமான் ஆவார். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இவரை வழிபட்டு பலன் பெற்றதால் ராமநாதர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் பர்வத வர்தினி என போற்றப்படுகிறாள்.
இராமாயணத்தில் சீதையை இலங்கைங்கு கவர்ந்து சென்ற இலங்கேஸ்வரனான ராவணனை போரில் கொன்றதால் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. இந்த தோஷத்தை நீக்க வட பாரதத்தில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து இங்கு பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய நினைத்தார் ஸ்ரீராமர். லிங்கத்தை கொண்டுவருவதற்கு வட நாட்டிற்கு வான் மார்க்கம் வழியாக சென்றார் ஆஞ்சநேயர். அவர் வருவதற்கு தாமதமாகவே இந்த கடற்கரை மணலிலேயே சீதா தேவி லிங்கத்தை உண்டாக்க, அதற்கு பூஜைகள் செய்து வழிபட்டார் ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணர். லிங்கத்தை தாமதமாக கொண்டு வந்த அனுமார் ராமர் செய்த மணல் லிங்கத்தை தனது வாலால் அடித்து தகர்க்க முயன்று தோற்றார். ஆஞ்சேநேயரின் வாலின் அடையாளம் இன்று ராமேஸ்வர கோவில் லிங்கத்தில் பார்க்க முடிவதாக கூறுகிறார்கள். ஆஞ்சேநேயர் தனக்காக கஷ்டப்பட்டு லிங்கத்தை கொண்டு வந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜை நடந்த பிறகே, சீதா தேவி மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜைகள் செய்யப்படுகிறது.
பாண்டியர்கள் காலத்திலும் இன்ன பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும், ராமநாதபுரத்தை ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் போதும் இக்கோவில் நன்கு சீர்திருத்தி கட்ட்டப்பட்டது. இந்தியாவிலேயே 690 அடி நீளமும், 435 அடி அகலமும், 1212 தூண்களும் கொண்ட பிரகாரம் இக்கோவிலின் சிறப்பாகும். இந்தியாவிலிருக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் இருக்கும் அக்னி தீர்த்தம் சீதை தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்த போது, அவளை தீண்டிய பாவத்திற்காக நெருப்பு கடவுளான அக்னி பகவான் இக்கடல் பகுதியில் நீராடி, ராமநாதரை வழிபட்டு தனது பாவங்களை போக்கி கொண்டார். இங்கு அக்னி தீர்த்தம் உட்பட 22 புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் நீராடுவது மிகுந்த புண்ணியத்தை சேர்க்கும். நமது அனைத்து பாவங்களையும் போக்கும்.
காசி மற்றும் ராமேஸ்வரம் நமது பாரதத்தில் இரு முக்கிய புண்ணிய தலங்களாகும். காசி ராமேஸ்வரத்திற்கு புண்ணிய யாத்திரை மேற்கொள்பவர்கள் ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, இந்த கடற்கரை மணலை எடுத்துக்கொண்டு காசியின் கங்கை நதியில் சேர்க்கவேண்டும். அங்கு காசி விஸ்வநாதரை தரிசித்து, அங்குள்ள கங்கை தீர்த்ததை கொண்டு வந்து ராமேஸ்வர ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கும் புனித யாத்திரையை ராமேஸ்வரத்திலேயே முடிக்க வேண்டும் என்பது ஐதீகம். தல சிறப்புக்கள் ராமேஸ்வர கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் 22 புனித தீர்த்தங்கள் தான். இந்த 22 தீர்த்தங்கள் எவை, அவற்றில் நீராடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம். மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும். சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும். காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும். சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும். சங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும். சக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும். சேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும். நள தீர்த்தம் – தடைகள் அகலும். நீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர். கவய தீர்த்தம் – பகை மறையும். கவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும். கந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம். பிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். கங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும். யமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும். கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும். சர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும். சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும். சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும். சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும். சூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும். கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.
இக்கோவிலின் அம்பாளின் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்பு லிங்கம், இன்றும் கோவிலின் மூலவரான ராமநாதருக்கு பின்பு வைத்து வணங்க படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. ஒருவரின் எப்படிபட்ட பாவங்களும் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து நீராடி வழிபடுவதால் அது நீங்கும் என்பது ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களின் திடமான நம்பிக்கையாக இருக்கிறது.
கோவில் அமைவிடம்
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் என்கிற தீவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்வதற்கு ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் மீது கட்டப்பட்டிருக்கும் ரயில் மற்றும் வாகனங்கள் செல்லும் மிக நீளமான பாலத்தின் வழியே மட்டுமே செல்ல முடியும்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 8.30 வரை கோவில் முகவரி அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்டம் – 623 526
தொலைபேசி எண் 4573 221223

0 Comments