திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

 திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

சங்க காலத்தில் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுளாக- செந்நிற மேனியனாக- சேவற்கொடியோனாக- கொற்றவை மைந்தனாக-சூரியனுக்கு ஒப்பானவனாக வழிபடப் பெற்றவன் முருகன். தமிழ் கடவுளான முருகன் வேலன், சரவணன், கார்த்திகேயன், கந்தன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவ சேனாபதி, மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பால சுவாமி, சிகி வாகனன், வள்ளி மணாளன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் போன்ற பல பெயர்களால் தொடர்ந்து வழிபடப்பட்டு வருகிறான். தமிழகத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் ஏராளமாக இருப்பினும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி), பழமுதிர் சோலை ஆகிய அறுபடை வீடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகப் போற்றி வழிபடப்பட்டு வருகின்றன. ஆற்றுப்படை வீடுகள் என்பதுவே பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றாகி அறுபடை வீடுகள் ஆயிற்று என்று கூறுவதுண்டு. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம். திருமுருகாற்றுப்படையில் ‘மாடமலிமறுகில் கூடற்குடவாய்ன்’ என்றும் கந்த புராணத்தில் ‘கூடலின் குட திசை அமர பரங்குன்று’ என்றும் திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்காக இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. மதுரை நகரின் கீழ்திசையிலிருந்து நோக்குவார்க்குப் பரங்குன்றம் தென்மேற்குத் திசையில் காட்சியளிக்கிறது. நகரம் இன்று மேற்காக விரிந்துள்ளமையால் பரங்குன்றம் மதுரைக்கு தெற்காக இன்று காணப்படுகிறது. அறுபடை வீட்டுக் கோயில்களில் இக்கோயில் கட்டுமான அளவில் பெரியதாகும். இத்தலத்து முருகப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப் படுத்தி நக்கீரர் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை சங்க காலம் தொட்டே இக்குன்றத்தில் முருக வழிபாடு சிறப்புற்று விளங்கியதை உணர்த்துகின்றது. குன்றத்தின் இயற்கை எழில் நக்கீரரால் அழகுற சித்தரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அகநானூறு திருப்பரங்குன்றத்தை முருகன் குன்றம்(59) என்றும் ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (149) என்றும், மதுரைக் காஞ்சி ‘ தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (264) என்றும் கூறுகிறது. பரிபாடல் பரங்குன்றின் முருகனைப் பற்றி விவரிக்கையில், குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. மேற்சுட்டிய சங்கப் பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியது என்றே சான்று பகர்கின்றன. சமஸ்கிருதமயமாக்கலுக்குப் பின் தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆன பிறகு, செந்தூரில் சூரப்பதுமனை வதம் செய்ததற்குப் பரிசாக இந்திரன் தன் புதல்வியாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுத்ததின் நினைவாக, புதுமணக் கோலத்தில் முருகப் பெருமான் திருவருள் பாலிக்கும் திருத்தலமாயிற்று.
திருப்பரங்குன்றம் பெயர் காரணம்
திருப்பரங்குன்றம் பெயர் காரணம் குறித்துப் பல்வேறான அனுமானங்கள் உள்ளன. முருகனின் கோயில் உள்ள குன்று சிவலிங்க வடிவில் அமைந்துள்ளதால் பரங்குன்று என்றும் சிவன் “பரங்குன்றநாதர்’ என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பரன் என்பது சிவனைக் குறிக்கும். சிறப்பை உணர்த்தும் விதமாக ‘திரு’ அடைமொழியுடன் திருப்பரங்குன்றம் என வழங்கப் பெறுவதாயிற்று. குன்றையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலும், ஆரம்பக் காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடைவரைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. குடைவரைக் கோயில் என்பது செயற்கையான கட்டுமானங்கள் ஏதும் இல்லாமல், மலைக்குன்றுகளின் அடிவாரப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளை மேலும் சிற்றறையாகக் குகையாக்கம் செய்து அமைக்கப்படும் கோயிலாகும். அருணகிரிநாதர்(15ஆம் நூற்றாண்டு) தான் எழுதிய திருப்புகழில், “தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே”(9) என்று பாடியிருப்பதில் இருந்து அவரது காலத்தில் தென்பரங்குன்றம் கோயிலே நடைமுறையில் வழிபடப்பட்டதாகத் தெரிகிறது. பின்னாளில் கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்குத் திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கக் கூடும். எனவே “திருப்பிய பரங்குன்றம்’ என்றாகி, பின்னர் இத்திருத்தலம் இலக்கியங்களில் “திருப்பரங்குன்றம்’ என்று மருவியதாகவும் கூறுவதுண்டு. இத்தலம் பரங்கிரி, சுமந்த வனம், பராசல தலம், குமாரபுரி விட்டணு துருவம், கந்த மாதனம்,கந்த மலை, சத்திய கிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல்படை வீடு எனப்
பல பெயர்களில் பல்வேறு காலங்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மலையை வடதிசையிலுருந்து பார்க்கும் பொழுது கைலாய மலை போன்றும், கிழக்கிலிருந்து பார்க்கும்பொழுது பெரும்பாறையாகவும், தெற்கிலிருந்து பார்க்குங்கால் பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு பார்க்கும்போது பெரிய சிவலிங்க வடிவமாகவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பராசர ஷேத்திரம்(தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய ஆறு பராசர முனிவரின் புதல்வர்கள் தங்கள் தந்தையின் சொல் கேளாமல் முறை தவறி நடந்தனர். எனவே, அவர்களை மீனாக மாற பராசரர் சாபமிட்டார். ஒரு நாள் முருகப் பெருமான் சரவணத்தில் தனது அன்னை உமையம்மையிடம் பால் அருந்துகையில், பால் துளிகள் அந்த மீன்கள் மீது விழவே சாபம் நீங்கியது. அறுவரும் பரங்குன்றம் முருகனைத் தியானித்து தவம் இயற்றி ஞான யோகம் அடைந்தனர். எனவே இப்பெயர் பெற்றது.) என்றும் இத்தலம் அழைக்கப் பெறுகின்றது. பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக் காலங்களில் சிவனுக்குக் கொடியேற்றப் பட்டாலும் இங்கு முருகனே வீதி உலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இங்கு முருகன் “சோம சுப்பிரமணியர்’ என்ற பெயரும் பெற்றுள்ளார். சோமன் என்பது சிவனைக் குறிக்கும். இத்திருக்கோயில் சன்னதி தெருவில் மயில் மண்டபம் திருக்கோயிலைப் பார்த்த வண்ணம் மயில் உருவத்துடன் அமைத்துள்ளது. அதற்கு முன் பகுதியில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இந்த இரு மண்டபங்களும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும். குடைவரைக்கோவிலான இத்திருக்கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் இது முருகபெருமானின் சிறப்புத்தலமாக விளங்கி வருகிறது.
கோயில் புராண வரலாறு
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசம் செய்கையில், தன் தாயின் மடி மீது அமர்ந்திருந்த முருகப் பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்க நேர்ந்தது. புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலம் அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் பாவம் என்று சமய சாத்திரங்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்குப் பரிகாரம் தேடியும், சிவனே தனக்குக் குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டியும் முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யத் தொடங்கியதாகவும், இதைப் பார்த்த சிவனும் பார்வதியும் தை மாத பூச விண்மீன் நாளன்று அவர் முன் தோன்றி, அவரது தவத்தைப் ஏற்று அருள் புரிந்ததாகவும் தொன்மம் கூறுகிறது. சிவன் சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருள் பாலிக்கிறார். குன்றத்திற்குச் செல்பவர்கள் முதலில் சிவனை வணங்கிவிட்டுத்தான் முருகனை வழிபட வேண்டும் என்பது மரபு. இத்தலத்தில் தான் இந்திரனின் விருப்பத்திற்கிணங்க முருகப் பெருமான் தெய்வயானையைப் பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
குன்றப் பின்னணியில் கோயில் கோபுரம்
தமிழ் கடைச் சங்கத்தின் தலைவர் நக்கீரன் சிவனாருடன் வாதம் புரிந்தமையால் சாபம் பெற்று நோய்வாய்பட்டு அவதியுற்றார். நோய் தீர தீர்த்த யாத்திரை மேற்கொண்டு வழியில் குன்றத்தில் தங்கினார். சரவணப் பொய்கை கரையில் ஆலமரத்து அடியில் பஞ்சாஷர பாறையில் அமர்ந்து சிவனைத் தியானித்து வழிபாடு செய்தார். அப்போது மரத்தில் இருந்து உதிர்ந்த ஓர் இலையின் ஒரு பாதி நீரிலும் மறு பாதி நிலத்திலும் விழுந்தது. நீரில் விழுந்த இலையின் பாகம் மீனாகவும் நிலத்தில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறியது. இந்த அரியக் காட்சியைக் கண்டு கீரனின் தியானம் கலைந்தது. அக்காட்சியில் அவர் மனம் லயித்தபோது கற்முகி என்ற பூதம் அவரைத் தூக்கிச் சென்று குகையில் வைத்தது. அங்கிருந்து தப்பிக்க அவர் திருமுருகாற்றுப்படை பாடினார். பாட பாட முருகனின் கைவேல் குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று நக்கீரனைக் காப்பாற்றியது. ‘பழமுதிர்ச் சோலை மலை கிழவோனே’ என்று பாட்டினை நக்கீரன் முடிக்க, ‘நான் என்ன கிழவனா’ என்று முருகப் பெருமான் கேட்டு மறைய, உடனே, ‘என்றும் இளையாய்’’ என்று நக்கீரன் வெண்பா பாடினாராம். வேல் பாறையைப் பிளந்த அடையாளத்தை தென்பரங்குன்றத்தில் இன்றும் காணலாம். குகையில் இருந்து நக்கீரன் காப்பாற்றப்பட்டதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரிக்கு முன்பாக முருகனின் வேலை மலை உச்சிக்குக் கொண்டு செல்லும் விழா நடைபெற்று வருகிறது. (திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்!’, தினமணி, 28 மார்ச் 2018)
குன்றத்தில் சமணம்
சங்க காலத்திலேயே மதுரை பகுதியில் சமண சமயம் வேரூன்ற தொடங்கியது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே குன்றத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய கற்படுக்கைகளும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.
இம்மூன்று கல்வெட்டுகளும் குன்றத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள குகையில் கற்படுக்கைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ளன.
‘அந்துவன் கொடுபிதவன்’
‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன்
செய்தான்
ஆய்சயன நெடுசாதன்’
‘மாரயது கயம’
சங்க காலத்திற்குப் பின் முற்காலப் பாண்டியர் காலத்தில் இக்குன்றில் சமணர்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் ஏராளமாகவே உள்ளன. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங்குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிடுகிறது. பரங்குன்றம், சமணர் மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானை மலை, இருங்குன்றம்(அழகர் மலை) முதலிய ஐந்து மலைகளுடன் நாகமலை (கொங்கர் புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டி மலை (திருப்பிணையன் மலை), கீழவளவுக் குன்று முதலிய மூன்று மலைகளையும் சேர்த்து எண்பெருங்குன்றங்கள் என்று வழங்குவது வழக்கம். (வெ.வேதாச்சலம், எண்பெருங்குன்றம். ப.7) இந்த எண்பெருங்குன்றங்களில் தான் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்தார்கள் என பிற்கால சோழர் காலத்தில் எழுதப் பெற்ற பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments