திருநாகேஸ்வரம் ராகு கோவில் சிறப்புகள்
மனிதர்கள் தவறு செய்வது இயற்கை என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தேவர்கள் மற்றும் நவகிரக நாயகர்களும் கூட சில சமயங்களில் தவறிழைத்திருக்கின்றனர். அப்படி ஒரு தவறை இழைத்து அதனால் தன் சக்திகளை இழந்த ராகு பகவான் தனது வலிமையை மீண்டும் பெற்ற “திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் திருக்கோவிலை” பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
திருநாகேஸ்வரம் கோவில் தல வரலாறு “திருநாகேஸ்வரம்” எனப்படும் ஊரில் இருக்கும் இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் என்றாலும் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழனால் நன்கு சீர்திருத்தி கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “நாகநாதர்” எனவும், இறைவி பார்வதி தேவி “கிரிஜா குஜாம்பிகை” எனவும் அழைக்கப்படுகிறார்கள். நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவ தலம் இது. புராணங்களின் படி முனிவர் ஒருவரின் மகனை பாம்பாக இருந்த “ராகு பகவான்” தீண்டியதால், அந்த முனிவரின் சாபம் பெற்று தன் சக்திகள் அனைத்தையும் இழந்தார் ராகு. இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானின் காட்சி பெற்று மீண்டும் தன் சக்தியை பெற்றார் ராகு பகவான். நாகத்தின் வடிவில் இருந்த ராகுவிற்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவ பெருமான் “நாகநாதர்” என அழைக்கப்படுகிறார்.
தல சிறப்பு
இக்கோவிலின் சிறப்பாக இங்கு வீற்றிருக்கும் நவகிரக நாயகரான ராகு பகவானுக்கு, பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பால் நீல நிறத்தில் காட்சியளிப்பதை பக்தர்கள் கண்டு வியக்கின்றனர். பொதுவாக ராகு பகவான் பிற கோவில்களில் மனித தலையும், நாக பாம்பின் உடலும் கொண்டது போன்ற விக்கிரகம் இருக்கும். ஆனால் இக்கோவிலில் ராகு பகவான் முழு மனிதனின் வடிவில் காட்சியளிக்கிறார்.
“கிரிஜகுஜாம்பிகை எனப்படும் பார்வதி,மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி” ஆகிய மூவரும் இந்த திருநாகேஸ்வரம் கோவிலில் ஒரே சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். இக்கோவிலின் குலமான “சூரிய தீர்த்தம்” குஷ்டரோக நோய்கள் மற்றும் இன்ன பிற நீண்ட நாள் நோய்கள் வராமல் காக்கும் சக்தி கொண்டதாக இருப்பதால் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலின் குளத்தில் நீராடி, பின் இவ்வாலய இறைவனை தரிசிக்கின்றனர். ஜாதகத்தில் ராகு கிரக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது இந்த திருநாகேஸ்வரம் கோவில். கோவில் அமைவிடம் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டதில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதிலிலிருந்தும் இக்கோவில் உள்ள ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. ரயில் மார்கமாக செல்வோர் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து, வாடகை வண்டிகள் மூலமாக இந்த கோவிலை அடையலாம்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் மதியம் 12.45 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோவில் முகவரி அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோவில் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர் மாவட்டம் – 612204 தொலைபேசி எண் 435 – 2463354 +91 94434 89839

0 Comments