மயிலாப்பூரில் சுயம்புவாக எழுந்தருளிய முண்டகக்கண்ணி அம்மன் கோவில் வரலாறு!
சென்னையில் ஏராளமான அம்மன் கோயில் உண்டு. அவற்றில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் புகழ் பெற்ற ஒன்று. ரேணுகாதேவி அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், மயிலாப்பூர் திருத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மயிலாப்பூரில் இந்த அம்மன் எழுந்தருளி கோயில் கொண்டுள்ள தெருவின் பெயரே முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு என்பதுதான். அன்னையின் கோயில் வாசல் ராஜ கோபுரத்துடன் இருந்தாலும் அன்னை குடிகொண்டுள்ள கருவறை இன்றும் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான். அதை விட அம்மன் மேலும் எளிமையாக இருக்கிறாள். சுயம்பு அம்மனாக எழுந்தருளியுள்ள முண்டகக்கண்ணி அம்மன் திருவுரு சிலை ஏதுமில்லை ஒருசாண் உயர தாமரை மொட்டுபோன்ற கல் அவ்வளவு தான். ஆனால் அவளின் அருளாற்றல் ஆகா கணக்கிலிட முடியாது என்கின்றனர் பக்தர்கள். அம்மனுக்கு கோபுரத்துடன் கருவறை அமைக்க முயன்ற போதெல்லாம் தடைபட்டு வந்துள்ளது. அதுவன்றி ஒருமுறை தீவிர முயற்சி மேற்கொண்ட போது அம்மனின் கோபம் அப்பகுதியில் தீ விபத்தாக வெளிப்படவே . வேண்டாம் இனி வீண் முயற்சி என விட்டுவிட்டனர். கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை, ‘விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்’ என்ற பொருளில் ‘முண்டகக் கண்ணியம்மன்’ என்கின்றனர். அதோடு முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு . அம்பிகை தாமரை போன்ற கண்ணாள் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள். அருகில் அரச மரமும் அதன்கீழ் நாகர்களின் சிலைகளும் உள்ளன. இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகினால் நாகதோஷங்கள் விலகி நலம் பயக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வமான கல்லால மரமும் புற்றுடன்கூடிய மூன்றடி கல்நாகமும் உள்ளன . இந்தக் கல்லால மரம்தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்த மரத்தின் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அது கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் பக்தர்களின் நெடுநாளாக நம்புகிறார்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் இருக்கும் பகுதியில் குளம் இருந்ததாம். அதன் கரையில் பழைமையான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அந்த ஆலமரத்தடியில்தான் அன்னை சுயம்புவாக வெளிப்பட்டாள் என்கின்றனர். மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது. ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும். அதோடு அம்மனை வழிபட தீராப் தீராப்பிணிகள் தீரும் , திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவளாக திகழ்கிறாள் முண்டகக்கண்ணணி அம்மன். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக் கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடி மாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. கோயில் வளாகத்தில் ஜமதக்கனி முனிவரின் சிலையும் உள்ளது கோயிலின் தொன்மையை உணர்த்துவதாக உள்ளது. மயிலாப்பூரில் லஸ் கார்னர் அருகில் கச்சேரி சாலையில் இடது புறம் பிரிகிறது முண்டகக்கண்ணி தெரு அதன் மத்தியில் உள்ளது அம்மனின் கோயில் . ஒருமுறை சுயம்பு முண்டகக்கண்ணியம்மனை தரிசிப்போம் நலன்கள் எல்லாம் பெறுவோம் . ஓம்சக்தி.Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments