கல்விக்கு அதிபதி சரஸ்வதிக்கு இந்தியாவில் எத்தனை கோவில் இருக்கு தெரியுமா?
மதுரை: கோடி கோடியாக சொத்துக்கள் வைத்திருந்தாலோ, நகைகள் வைத்திருந்தாலோ பிறாரால் திருடப்பட்டு விடும். ஆனால் யாராலும் கொள்ளையடிக்கப்பட முடியாத ஒரு பொருள் கல்வி செல்வம்தான். கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்தால் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் சரஸ்வதி ஆவாஹணம் செய்து வழிபடுகின்றனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதும் உள்ள பிரபல சரஸ்வதி கோவில்களை தரிசனம் செய்வோம்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. அன்னை சரஸ்வதி நாவினில் குடியிருக்கிறார். எனவேதான் நாம் பேசும் ஒவ்வொரு சொற்களையும் நிதானமாக பேச வேண்டும்.
ஒட்டக்கூத்தர் பூஜித்த கூத்தனூர் சரஸ்வதி
சரஸ்வதிக்கென திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூந்தோட்டத்தில் சரஸ்வதி கோவில் உள்ளது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர் வந்துள்ளது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
மாணவர்கள் வழிபாடு
இக்கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா விஜயதசமி. விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும்.தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.
வாணியம்பாடி சரஸ்வதி
பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ்ணகிரி பாதையில் இத் தலம் அமைந்துள்ளது.
வேதாரண்யம் வீணையில்லாத சரஸ்வதி
வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.
தெலுங்கானா சரஸ்வதி கோவில்
தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில்.
சிருங்கேரி சாரதாதேவி
கர்நாடகா சிருங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.
கேரளா சரஸ்வதி கோவில்
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்த ஆலயம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments